×

ஆற்றுப்படுத்தும் ஆய்வுப்பட்டியல்… இயல்பாக்கும் இயன்முறை மருத்துவம்!

நன்றி குங்குமம் தோழி

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

அந்தக் காலத்துல எல்லாம் எங்க ஊருல ஒரே ஒருத்தருக்குதான் இந்த நோய் இருக்கும்… இப்ப என்னடான்னா வீட்டுக்கு ஒருத்தருக்கு இருக்கு என வயதான பாட்டிகள் கூட ஒரு தரவினை
தருவதை பார்க்கலாம்.இப்படி நோயாளரின் எண்ணிக்கை, வயது, இறப்பு சதவிகிதம், எந்தப் பகுதி மக்கள் என பல கோணங்களில் நம் முன்னோர் முதல் இன்றைய ஆய்வாளர்கள் வரை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தி நமக்குப் பயனுள்ள தரவுகளை வழங்குகின்றனர். அந்த வகையில் இயன்முறை மருத்துவம் சார்ந்த ஆய்வுகள் தரும் தரவுகள் சிலவற்றைதான் இதோ, இந்தக் கட்டுரையின் வாயிலாக விழிப்புணர்வுடன் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

* உலகளவில் ஒரு வருடத்திற்கு 160 மில்லியன் பெண்களும், 120 மில்லியன் ஆண்களும் கழுத்து வலியினால் பாதிக்கப்படுகிறார்கள்.
* தொடர்ந்து அதிக உயரமுடைய பாதணிகள் (Hight Heels) பயன்படுத்தும் பெண்களில் 60 சதவிகிதத்தினர் முதுகு வலியினால் மருத்துவமனையை நாடுகிறார்கள்.
* ஆண்களை விட 20 சதவிகிதம் கூடுதலாக இந்தியப் பெண்கள் மூட்டு வலியால் அவதியுறுகிறார்கள்.
* உலகளவில் ஆறில் ஒரு பெண் கருவுறுதலில் பாதிக்கப்படுகிறார் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
அவற்றுக்கான பல காரணங்களில் பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர் கட்டியானது 8 முதல் 40 கோடிபெண்களை பாதிக்கிறது.
* 60 சதவிகித மக்களுக்கு தன் தொழில் வழியாக உடல் மூட்டு பிரச்னைகள் வருகிறது. உதாரணமாக, கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, விளையாட்டு வீரர்களுக்கு விளையாடும் போது ஏற்படும் காயம் போன்றவை.

* தமிழ்நாட்டில் 30 சதவிகித பெண்கள் அதிக உடல்பருமனுடன் உள்ளனர். இதனால் இந்திய மாநிலங்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றோம்.
* 60 முதல் 85 சதவிகித மக்கள் உலகளவில் ‘உட்கார்ந்த வாழ்க்கை முறையில்’ (sedentary lifestyle) இருக்கின்றனர். இதனால் வரும் உடல்நலக் கேடுகளுக்கும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
(உதாரணமாக, இதய அடைப்பு, உடற்பருமன், அதிக ரத்தக்கொழுப்பு அளவு, உடல் மூட்டு வலிகள்).
* இந்தியாவில் பத்தில் ஆறு பேருக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளது. இதில் ஆண்களைக் காட்டிலும் 10 சதவிகிதம் பெண்களுக்கு அதிகம் உள்ளது.
* குழந்தைகள் வீட்டில் இருந்தால் சராசரியாக ஒரு நாளுக்கு 7 மணி நேரம் தொலைக்காட்சி, தொலைபேசி, வீடியோ கேம் என பார்க்கின்றனர்.

* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஒரு சதவிகித மக்கள் முடக்குவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். நிறைய பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னான காலத்தில் அறிகுறிகள் தோன்றுகிறது.
* கருவுற சிரமப்படும் பெண்களுக்கு முதன்மைக் காரணமாக இருப்பது பி.சி.ஓ.டி எனப்படும் சினைப்பை கட்டிகள். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 3 முதல் 22 சதவிகித பெண்களுக்கு இப்பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
* உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி உலகளவில் 1.71 மில்லியன் மக்கள் தசை மற்றும் மூட்டுப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
* உலகளவில் 570 மில்லியன் மக்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

* உலகில் 222 மில்லியன் மக்கள் கழுத்து வலியினால் பாதிக்கப்படுகிறார்கள்.
* 440 மில்லியன் மக்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது. இதில் 26 மில்லியன் மக்கள் எலும்பு கூடிய பின் போதுமான பயிற்சிகள் செய்யாமல் பாதிக்கப்பட்ட எலும்பு மற்றும் மூட்டினை அசைக்க முடியாமலும், முன்பு போல் இயல்பாக வேலைகளை செய்ய முடியாமலும் இருக்கின்றனர்.
* இந்தியாவில் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பின் அளவு 40 சதவிகித பெண்களுக்கும், 12 சதவிகித ஆண்களுக்கும் இருக்கின்றது.
* இந்தியாவில் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களில் பத்தில் ஆறு பேருக்கு வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு அதிகம் உடையவர்கள்.

* இந்திய மக்கள் தொகையில் 30 சதவிகிதம் மக்கள் கால் முட்டி வலியால் பாதிக்கப்படுகின்றனர். இதிலும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவது பெண்களே.
* இந்தியாவில் 40 சதவிகித நடுத்தர வயது பெண்கள் ஏதேனும் ஒரு உடல் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர்.
* ADHD என சொல்லப்படும் துறுதுறு குழந்தைகளில் 70 சதவிகிதம் ஆண் குழந்தைகள் மற்றும் 30 சதவிகிதம் பெண் குழந்தைகள்.
* உலகளவில் 15 மில்லியன் மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.இதில் 5 மில்லியன் மக்கள் இறந்துவிடுகின்றனர். மேலும் 5 மில்லியன் மக்கள் பக்கவாதத்தால் ஏற்படும் பக்கவிளைவுகளால் அவதியுறுகிறார்கள். அதாவது, கைகால்களை முன்பு போல் மீண்டும் அசைக்க முடியாமல் முடங்கிவிடுவது.

இப்படி பல தரவுகள் நம்மை எச்சரிக்கும் விழிப்புணர்வு தொடர்பானவை என்பதாலும், மேல் சொன்ன எல்லா நோய்களுக்கும், கோளாறுகளுக்கும் இன்றைக்கு இயன்முறை மருத்துவத்தில் பங்கு உண்டு என்பதாலும், நோயின் அறிகுறி உள்ளவர்கள், கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வோடு உடனுக்குடன் தக்கமுறையில் இயன்முறை மருத்துவரை அணுகி ஆலோசித்து பயன்பெறுவது இன்றியமையாதது ஆகும்.

The post ஆற்றுப்படுத்தும் ஆய்வுப்பட்டியல்… இயல்பாக்கும் இயன்முறை மருத்துவம்! appeared first on Dinakaran.

Tags : Gomati Isaikar ,
× RELATED வளரும் குழந்தைகளும்… அவர்களின் வளர்ச்சிகளும்!